இலங்கை போரில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய சிங்களர்கள்
இலங்கை இறுதிப்போரின் 13 ஆம் ஆண்டு நினைவுத் தினத்தையொட்டி இலங்கையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.
இலங்கையின் முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழர்கள் மீது அந்நாட்டு ராணுவம் 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி நடத்திய ஈவு இரக்கமற்ற தாக்குதலில் ஒன்றரை லட்சம் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இலங்கையின் வடக்கு மாகாண சபையில் இந்த நாளை இன அழிப்பு நாளாக பிரகடனம் செய்யப்பட்டு ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் நேற்று 13 ஆம் ஆண்டு நினைவுத் தினம் அனுசரிக்கப்பட்டது. இலங்கையில் பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றத்திற்கு பிறகு நடைபெறும் நிகழ்வு என்பதால் இந்த சம்பவம் அனைவரிடத்திலும் கவனம் பெற்றது.
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் இறுதி போரில் தனது ஒரு கையினை இழந்து பாதிக்கப்பட்ட ஒருவர் பொதுச்சுடரை ஏற்றி வைத்தார். இதேபோல் அந்நாட்டு தலைநகர் கொழும்புவில் உள்ள காலிமுகத் திடலில் ஆண்டுதோறும் ராணுவ வெற்றிக் கொண்டாட்டங்கள் அரசால் நடைபெற்று வருவது வழக்கம்.
அங்கு கடந்த சில மாதங்களாக மக்கள் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தமிழர்களும், சிங்களர்களும் இணைந்து தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் காலிமுகத் திடல் நினைவு ஸ்தூபி அமைத்து உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.