பஹ்ரைனில் விபத்தில் சிக்கிய தமிழக இளைஞர் - தவித்த தாய்க்கு உடனடியாக உதவிய தமிழக அரசு
குடும்ப வறுமை காரணமாக பஹ்ரைன் நாட்டிற்கு வேலைக்கு சென்ற தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் விபத்தில் சிக்கி நிலைகுலைந்த நிலையில் அவரை மீட்டு தாயகம் அழைத்து வந்து மருத்துவ உதவிகளை செய்து வரும் தமிழக அரசுக்கு குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
வறுமையால் கடல் தாண்டி போனவருக்கு நிகழ்ந்த சோகம்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா இவரது மனைவி அழகி. இவர்களுக்கு வீரபாண்டி, அழகு பெருமாள் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
கணவர் சுப்பையா கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வந்த நிலையில் விபத்து ஒன்றில் சிக்கியதால் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குடும்பம் வறுமையில் இருப்பதை உணர்ந்த மூத்த மகனான வீரப்பாண்டி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பஹ்ரைன் நாட்டிற்கு சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சென்றுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் வீரபாண்டி பஹ்ரைன் நாட்டில் விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அரசின் நடவடிக்கையால் தாயகம் வந்த இளைஞர்
மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்த வீரபாண்டியனின் தாய் அழகி மகனை தமிழ்நாடு கொண்டு வருவதற்கு தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த தகவல் வெளிநாடு தமிழர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசின் முயற்சியால் வீரபாண்டி தமிழகம் கொண்டு வரப்பட்டார்.
தன் மகனின் வருகையை ஆவலாக காத்திருந்த தாய் விமான நிலையத்தில் தன் மகனின் நிலையயை பார்த்து கதறி அழுத காட்சிகள் கண்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
இதையடுத்து நிலைகுலைந்து போய் தமிழகம் வந்த இளைஞர் வீரபாண்டியனை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் ரூ.50 ஆயிரம் நிதியுதவியும் அளித்தார்.