எம்.பி. விஜய் வசந்தின் சமூகவலைத்தள பக்கங்கள் திடீர் முடக்கம்
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தின் சமூக வலைதளப் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. நேற்று இரவு எம்.பி.விஜய் வசந்த்க்கு வாட்ஸ்அப் மூலம் ஒரு செய்தி வந்துள்ளது.
அந்த செய்தியில், சமூக வலைதளமான டுவிட்டரில் அவர் செய்த உண்மைக்கு புறம்பான பதிவை நீக்குவதற்கு வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும் அதற்காக ஓ.டி.பி எண்ணை கூற வேண்டுமென ஒரு லிங்க் வந்துள்ளது. அந்த லிங்கை அணுகிய போது, விஜய் வசந்தின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டன. இதுதவிர அவரது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களையும் மர்ம நபர்கள் முடக்கி இருக்கிறார்கள். இது குறித்து, சைபர் கிரைம் காவல் துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது சமூகவலைதள பக்கங்களை பயன்படுத்தி தவறான தகவல்களை யாரேனும் பரப்பினால் பொதுமக்கள் அதை நம்ப வேண்டாம் என விஜய் வசந்த் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.