வேதா இல்லம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு - பரபரப்பில் அதிமுகவினர்

tamilnadu judgment vedha illam
By Nandhini Jan 05, 2022 03:35 AM GMT
Report

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மேல்முறையீடு செய்துள்ள வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் என்னும் வீட்டில் வாழ்ந்து வந்தார். இந்த இல்லம் அரசுடமையாக்கப்படும் என்று கடந்த ஆட்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இதனையடுத்து, அந்த இடத்தை தமிழக அரசு கையகப்படுத்தி, அரசுடைமையாக்குவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், இதனை எதிர்த்து, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்தார்கள். இவ்வழக்கில் கடந்த நவம்பர் 24ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதன்படி, வேதா நிலையத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது என்றும், 3 வாரத்தில் வேதா நிலையம் தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து, போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலைய நினைவு இல்லத்தின் சாவியை ஆட்சியர் விஜயா ராணி தீபா, தீபக்கிடம் ஒப்படைத்தார்.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க இருக்கிறது.