அதிமுக ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாக மாற்றப்பட்டுள்ளது: முதல்வர் பழனிசாமி!
அதிமுக ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாக மாற்றப்பட்டுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன அந்த வகையில் கரூர் தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் குளித்தலை தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரசேரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது பேசியவர், ”எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறந்த வேட்பாளர், திறமையானவர், எளிமையானவர். உண்மையிலேயே மக்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர்.
கரூர் மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க ரூ.72 கோடி மதிப்பீட்டில் பணிகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மண்ணில் இருந்து மறைந்தாலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் எம்.ஜி.ஆர். மற்றும், ஜெயலலிதா. எம்.ஜி.ஆர். தோற்றுவித்த இயக்கத்தை இமைபோல காத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

தலைவர்கள் பேச்சை கேட்டு வளர்ந்தவன் நான், இங்கு மக்கள் தான் முதலமைச்சர். இந்தியாவிலேயே தமிழகம் தான் சிறந்த மாநிலம். தமிழகத்தில் குடிமராமத்துப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதிமுக ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாக மாற்றப்பட்டுள்ளது” என்று பேசினார்.