சென்னை கனமழையால் ரயில் பாதையில் தேங்கிய மழைநீர் - ரயில்கள் சேவை பாதிப்பு
கனமழையால் சென்னை புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் போக்கு வரத்தில் பாதிப்பு ஏற்பட்டு, பயணியர் அவதிக்கு ஆளாகினர்.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது -
சென்னையில் பெய்து வரும் கன மழை காரணமாக எழும்பூர் - கடற்கரை இடையேயான ரயில் பாதையில் பல இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. எழும்பூர் - பூங்காநகர் இடையே உள்ள பாலத்தில் தண்ணீர் அதிக உள்ளது.
இதனால், தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. காலை 9:00 மணியிலிருந்து, எழும்பூர் - கடற்கரை ரயில் நிலையங்கள் இடையேயான மின்சார ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.
தாம்பரத்திலிருந்து கடற்கரை நிலையத்திற்கு புறப்பட்ட புறநகர் மின்சார ரயில்கள், எழும்பூர் வரை இயக்கப்பட்டு, பின் தாம்பரத்துக்கு திருப்பி இயக்கப்பட்டன. மீட்பு பணி ரயில்வே மீட்பு பணி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தண்டவாளத்தில் தேங்கிய நீரை மோட்டார் பம்ப் வாயிலாக அகற்றி வருகின்றனர்.
வடிகால் வாய்காலில் நிரம்பிய மண்ணையும், குப்பையையும் அகற்றி வருகின்றனர். மழை நீர் வேகமாக வடிவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பின், 12:00 மணிக்கு, எழும்பூர் - கடற்கரை இடையேயான ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியது. எழும்பூர் - கடற்கரை நிலையங்கள் இடையே வேகம் குறைத்து ரயில்கள் இயக்கப்பட்டன.
எக்ஸ்பிரஸ்கள் தென் மாவட்டங்கள் வழியாகவும், தென் மாவட்டங்களிலிருந்தும், நேற்று காலை சென்னை எழும்பூர் வந்த, கொல்லம், மங்களூரு, மலைக்கோட்டை, பாண்டியன், மன்னை, காரைக்கால், கன்னியாகுமரி, முத்து நகர், ராமேஸ்வரம், ராமேஸ்வரம் சேது, அனந்தபுரி, திருச்செந்துார் எக்ஸ்பிரஸ் ரயில்கள், ஒரு மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரை தாமதமாக வந்தடைந்தன.
நேரம் மாற்றம் சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரலிலிருந்து கர்நாடகா மாநிலம் மங்களூருக்கு மாலை 4:20க்கு இயக்கப்பட வேண்டிய சிறப்பு ரயில், தாமதமாக இரவு, 8:30 மணிக்கு இயக்கப்பட்டன. சென்னை சென்ட்ரலிலிருந்து ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூருக்கு மாலை, 5:40க்கு இயக்கப்பட வேண்டிய சிறப்பு ரயில், இரவு, 8:30 மணிக்கு இயக்கப்பட்டன. சென்னை சென்ட்ரல் - பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையங்கள் இடையேயான ரயில் பாதையில் மழை நீர் தேங்கியதால், அந்நிலையங்கள் இடையே ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
இதனால், வெளியூர்களில் இருந்து சென்ட்ரல் வந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள், பேசின்பிரிட்ஜ் நிலையத்தில், 30 நிமிடங்களில் இருந்து, ஒரு மணி நேரம் வரை நிறுத்தி வைக்கப்பட்டன. பின், சென்ட்ரலுக்கு வேகம் குறைத்து இயக்கப்பட்டன. சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில்கள், ஒரு மணி நேரம் வரை தாமதாக புறப்பட்டு சென்றன.
புறநகர் ரயில்கள் சென்னை சென்ட்ரல் மூர் மார்க்கெட் ரயில் நிலையத்தில் இருந்து, ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, ஆந்திர மாநிலம் சூலுார்பேட்டைக்கு இயக்கப்பட்ட மின்சார ரயில்கள் மழையால், இருவழியிலும், 30 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்பட்டன.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக சென்னை ரயில்கள் தாமதமாக செயல்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.