உத்தரப்பிரதேசத்தில் இயக்குவதற்காக தமிழக ரயில் பெட்டிகள் குறைப்பு - பயணிகள் அதிர்ச்சி
கும்பமேளா நிகழ்விற்காக தமிழக ரயில்களில் பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளது.
கும்பமேளா
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி முதல் பிப்ரவரி 26ம் தேதி வரை பிரம்மாண்டமான கும்பமேளா விழா நடைபெற உள்ளது.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த நிகழ்வில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் அதற்கான முன்னேற்பாடுகளை உத்தரபிரதேச அரசு செய்து வருகிறது.
ரயில் பெட்டிகள் குறைப்பு
நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் கும்பமேளா நிகழ்விற்கு செல்வதால் பக்தர்களின் வசதிக்காக கூடுதல் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முன்வந்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் கூடுதல் ரயில் பெட்டிகள் தேவைப்படுவதால், தமிழ்நாட்டில் குறுகிய தூரத்தில் இயக்கப்படும் 10 'மெமு' வகை மின்சார ரயில்களில் தற்போதுள்ள 12 பெட்டிகளில் இருந்து தலா 2 பெட்டிகள் தற்காலிகமாக குறைத்து இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காலை 6.35 மணிக்கு புறப்படும் எழும்பூர்-புதுச்சேரி ரயில், காலை 4.30 மணிக்கு புறப்படும் திருப்பதி-புதுச்சேரி ரயில், மதியம் 2.55 மணிக்கு புறப்படும் புதுச்சேரி -திருப்பதி ரயில், மதியம் 3.50 மணிக்கு புறப்படும் புதுச்சேரி-சென்னை எழும்பூர் ரயில் ஆகியவற்றில் 2 பெட்டிகள் குறைத்து இயக்கப்படுகிறது.
ரயில் பட்டியல்
காலை 5.20 மணிக்கு புறப்படும் விழுப்புரம் - தாம்பரம் ரயில், காலை 9.45 மணிக்கு புறப்படும் தாம்பரம்-விழுப்புரம் ரயில், மதியம் 1.40 மணிக்கு புறப்படும் விழுப்புரம் - சென்னை கடற்கரை ரயில், மாலை 6 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை - திருவண்ணாமலை ரயில் ஆகியவை வரும் 26ம் தேதி முதல் 2 பெட்டிகள் குறைத்து இயக்கப்படும்.
மாலை 6 மணிக்கு புறப்படும் தாம்பரம் - விழுப்புரம் ரயில், காலை 4 மணிக்கு புறப்படும் திருவண்ணாமலை - தாம்பரம் ரயில் 27ம் தேதி முதல் தலா 2 பெட்டிகள் குறைத்து இயக்கப்படும். மறு அறிவிப்பு வரும் வரை இந்த நடைமுறை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த ரயில்களில் அதிக பயணிகள் பயணிப்பதால் கூட்ட நெரிசலோடு பயணிக்கும் நிலையில் பெட்டிகளை குறைந்துள்ளது பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.