டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு!
டாஸ்மாக் நிறுவனம் மதுபான வகைகளின் விலையை உயர்த்தி இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
டாஸ்மாக்
தமிழக அரசின் முக்கிய நிதி ஆதாரங்களில் ஒன்றாக மது வருமானம் உள்ளது. அரசு சார்பில் மதுபானங்களை விற்க டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்படும் என அறிவித்திருந்த நிலையில், கடந்த ஆண்டு வரை 5,329 மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வந்தன. அதில் தகுதியான 500 கடைகள் கண்டறியப்பட்டு மூடப்பட்டது.
விலை உயர்வு
இதன்மூலம், அரசுக்கு 45000 கோடி வரிவருவாய் வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வருவாயை பெருக்குவதற்கு டாஸ்மாக் மதுபானங்கள் விலையை குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கேற்ப 'ஆப்' பாட்டில், முழு பாட்டில் விலையும் ரூ.30 முதல் ரூ.80 வரை விலை உயர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து பேசிய டாஸ்மாக் வட்டார அதிகாரிகள், மூலப்பொருட்களின் விலை உயர்வால் மது வகைகள் விலைகள் குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் என்ற அளவில் உயர்த்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விலை உயர்வை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைமுறைப்படுத்துவதா?
அல்லது நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு நடைமுறைப்படுத்துவதா? என்பதை அரசு தான் முடிவு செய்யும் எனத் தெரிவித்துள்ளனர்.