தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.23) முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.23) முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் வேகத்துக்கு முட்டுக்கட்டை போடும் வகையிலும், ‘ஒமைக்ரான்’ சமூக பரவல் ஆகிவிடக்கூடாது என்பதற்காகவும் தமிழக அரசின் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கிறது.
இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
யாருக்கு அனுமதி?
ரெயில், விமான பயணிகள் சொந்த மற்றும் வாடகை வாகனங்களில் செல்லலாம். போலீசார் வாகன சோதனையின்போது பயணச்சீட்டை காண்பிப்பது அவசியம் ஆகும்.
பயணிகளை இறக்கிவிட்டு திரும்பும்போது அவர்களிடம் டிக்கெட் நகலை பெற்று வைத்திருக்க வேண்டும். டிரைவர்களுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
முழு ஊரடங்கில் பால், பத்திரிகை வினியோகம், பெட்ரோல் நிலையங்கள், மருத்துவம், மருந்தகங்கள், இறுதிச்சடங்கு போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி உண்டு.
பத்திரிகை-ஊடகத்துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் முழு ஊரடங்கில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளர்கள் போலீசாரின் வாகன சோதனையின்போது அடையாள அட்டையை காண்பித்து தங்கு தடையின்றி செல்லலாம்.