ஆன்லைன் செமஸ்டர் தேர்வை மாணவர்கள் புத்தகம் பார்த்து எழுதலாம் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு?
அண்ணா பல்கலைக்கழகம் ஆன்லைன் செமஸ்டர் தேர்வில் புத்தகத்தை பார்த்து எழுத மாணவர்களுக்கு அனுமதி வழங்க திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் எடுக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. வரும் 3ம் தேதி நடைபெற இருந்த 12ம் வகுப்புத் தேர்வும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொறியியல் செமஸ்டர் தேர்வின்போது, மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதி என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்வு எழுதும்போது கேள்விக்கு சந்தேகம் ஏற்பட்டால் புத்தகம் அல்லது இணையத்தளம் பார்த்து எழுத அனுமதி அளிக்கப்படவுள்ளதாம், இதன் மூலம் பெரும்பாலான மாணவர்கள் தேர்ச்சியடைய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
ஏற்கெனவே மாணவ, மாணவியருக்கு நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வுகளில் 30 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.
அத்துடன் 70 சதவீத மாணவர்கள் பெரும்பகுதியினர் தோல்வி அடைந்துவிட்டதாகவும், 30 சதவீத மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதாக அவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் கூறியது குறிப்பிடத்தக்கது.