சென்னை மாதவரத்தில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பரிதாப பலி!

tamilnadu-struck-by-electricity-death
By Nandhini May 18, 2021 03:42 AM GMT
Report

சென்னை மாதவரத்தில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை மாதவரம், பொன்னியம்மன் மேடு, பெரிய சாலையைச் சேர்ந்தவர் காஜா மொய்தீன். இவர் அதே பகுதியில் சொந்தமாக சிக்கன் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் முகம்மது ஹசன். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா காலக்கட்டம் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், முகம்மது தந்தைக்கு உதவியாக சிக்கன் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் காலை 10 மணிக்கு வியாபாரத்தை முடித்துவிட்டு, தந்தை, மகன் இருவரும் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

பிறகு மகன் மட்டும் கடைக்கு வந்து சுத்தம் செய்வதற்காக அங்குள்ள சிக்கன் அரவை இயந்திரத்தை இயக்கியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அந்த அரவை இயந்திரத்திலிருந்து மின்சார கசிவு ஏற்பட்டு, முகமது ஹசன் உடலில் பாய்ந்தது. மின்சாரம் தாக்கியத்தில் முகம்மது சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, கடைக்குச் சென்ற மகன் வெகுநேரமாக வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த தந்தை கடைக்கு உள்ளே சென்று பார்த்தார். அப்போது, கடையில் மகன் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து, உடனே மாதவரம் காவல் துறைக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் முகம்மது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை மாதவரத்தில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பரிதாப பலி! | Tamilnadu Struck By Electricity Death