உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி - தமிழகத்தை புயல் தாக்குமா? - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரபிக்கடலில் டவ்தே புயல் உருவானது. இந்த புயலால் குஜராத், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனையடுத்து, நேற்று முன்தினம் குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் – மாகுவா இடையே டவ்தே புயல் கரையைக் கடந்தது.
புயல் கரையைக் கடக்கும்போது, கடலோர மாவட்டங்களில் சுமார் 190 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. இதனால் குஜராத் மாநிலத்தில் பல வீடுகள் சேதமடைந்தன.
இந்நிலையில், தற்போது வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு -
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இதனால், வரும் 23ம் தேதி உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறுகிறது. இதனையடுத்து, தமிழகத்தில் மே மாத இறுதியில் தென்மேற்கு பருவ மழை தொடங்க வாய்ப்பு இருக்கிறது.
தற்போது உருவாகும் புயல் தமிழகத்தை தாக்குவது குறைவு. தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை 21ம் தேதியில் தொடங்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.