தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு

Actors Actress
By Fathima Jan 30, 2026 07:13 AM GMT
Report

2016 முதல் 2022-ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமுதாய சிந்தனைகளுடன் கூடிய மனித நல்லுணர்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக, சிறந்த தமிழ்த் திரைப்படங்கள், சிறந்த நடிகர், சிறந்த நடிகையர், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு திரைப்பட விருதுகளும், அதேபோன்று சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சிறந்த நெடுந்தொடர்கள், சிறந்த கதாநாயகன், சிறந்த கதாநாயகி, ஆண்டின் சிறந்த சாதனையாளர், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருக்கு சின்னத்திரை விருதுகளும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருவது வழக்கமாகும்.‎

எனினும், இடையே சில ஆண்டுகள் வழங்கப்படாமல் இருந்த இந்த விருதுகளை தற்போது வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, 2016-2022ஆம் ஆண்டுகளுக்கான அரசு திரைப்பட விருதுகள், 2014-2022 ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள் தமிழக அரசால் அறிக்கை மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2016-ஆம் ஆண்டுக்கான விருதுகள் விவரம் ‎‎

2016 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான விருது 'புரியாத புதிர்' திரைப்படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு வழங்கப்படுகிறது. சிறந்த நடிகைக்கான விருது 'பாம்பு சட்டை' திரைப்படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷுக்கும், சிறந்த நடிகருக்கான சிறப்பு பரிசை பொருத்தமட்டில் 'ஜோக்கர்' படத்தில் நடித்த குரு சோமசுந்தரத்திற்கும், சிறந்த நடிகைக்கான சிறப்பு பரிசு விருத்தினை 'அருவி' படத்தில் நடித்த அதிதி பாலனுக்கும் வழங்கப்படுகிறது.

2016 ஆம் ஆண்டு அதிக திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்கள் நடித்தமைக்காக மறைந்த நடிகர் ரோபோ சங்கருக்கும் விருது வழங்கப்படுகிறது. அந்த ஆண்டின் சிறந்த படத்திற்கான முதல் பரிசினை 'மாநகரம்', இரண்டாவது பரிசினை 'புரியாத புதிர்', மூன்றாவது பரிசினை 'மாவீரன் கிட்டு' திரைப்படமும் வென்றுள்ளது. மேலும், அதே ஆண்டு பெண்களின் உணர்வுகளை சித்தரிக்கும் படம் என்கிற சிறப்பு பரிசினை 'அருவி' திரைப்படம் பெற்றுள்ளது.‎‎‎

2017ஆம் ஆண்டு விருது பெறுபவர்களின் ‎விவரம்‎

‎ 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது கார்த்திக்கும், 'அறம்' திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது நயன்தாராவுக்கும், சிறந்த நடிகருக்கான சிறப்பு பரிசாக டூலெட் திரைப்படத்தில் நடித்ததற்காக சந்தோஷ் ஸ்ரீராமுக்கும் வழங்கப்படுகிறது.

சிறந்த நடிகைக்கான சிறப்பு பரிசு 'தரமணி' திரைப்படத்தில் நடித்ததற்காக ஆண்ட்ரியாவுக்கும், சிறந்த வில்லன் நடிகருக்கான விருதினை 'திருட்டுப் பயலே 2' திரைப்படத்தில் நடித்த நடிகர் பிரசன்னா விற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அதே ஆண்டில் சிறந்த படத்திற்கான முதல் பரிசை 'அறம்' திரைப்படமும், இரண்டாவது பரிசை 'விக்ரம் வேதா' திரைப்படமும், மூன்றாவது பரிசை 'தரமணி' திரைப்படமும் பெறுகிறது.

சிறந்த படத்திற்கான சிறப்பு பரிசினை 'டூலெட்' திரைப்படமும், பெண்களின் உணர்வுகளை அழகாக சித்தரிக்கும் திரைப்படமாக 'தர்மதுரை' திரைப்படமும் தேர்வாகி இருக்கின்றன. அதே ஆண்டு சிறந்த இயக்குனருக்கான விருதினை, 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படத்தை இயக்கிய எச் வினோத்திற்கும் வழங்கப்பட உள்ளது.‎‎‎

2018 ஆம் ஆண்டு விருது பெறுபவர்களின் விவரம்‎

‎ சிறந்த நடிகருக்கான விருதினை 'வட சென்னை' திரைப்படத்தில் நடித்த தனுஷுக்கும், சிறந்த நடிகைக்கான விருதினை 'செக்கச் சிவந்த வானம்' திரைப்படத்தில் நடித்த நடிகை ஜோதிகாவுக்கும், சிறந்த நடிகருக்கான சிறப்பு பரிசினை 'ராட்சசன்' திரைப்படத்தில் நடித்த நடிகர் விஷ்ணு விஷாலுக்கும், சிறந்த நடிகைக்கான சிறப்பு பரிசினை கனா மற்றும் வடசென்னை திரைப்படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆண்டு சிறந்த நகைச்சுவை நடிகராக யோகி பாபு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிறந்த திரைப்படமாக 'பரியேறும் பெருமாள்' முதல் பரிசையும். இரண்டாவது பரிசினை கடைக்குட்டி சிங்கம் திரைப்படம்.

மூன்றாவது பரிசினை 96 திரைப்படமும், சிறந்த படத்திற்கான சிறப்பு பரிசாக சீதக்காதி திரைப்படமும் பெண்கள் உணர்வுகளை உயர்வாக சித்தரிக்கும் படமாக கனா திரைப்படமும் தேர்வாகியுள்ளது. அதே ஆண்டு சிறந்த இயக்குனருக்கான விருதினை பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜுக்கு வழங்கப்பட உள்ளது.‎

‎ 2019 ஆம் ஆண்டு விருது பெறுபவர்களின் விவரம்

‎‎ சிறந்த நடிகருக்கான விருதினை ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்தில் நடித்த நடிகர் பார்த்திபனுக்கும், சிறந்த நடிகைக்கான விருதினை அசுரன் திரைப்படத்தில் நடித்த நடிகை மஞ்சு வாரியக்கும், சிறந்த நடிகருக்கான சிறப்பு பரிசாக கைதி திரைப்படத்தில் நடித்த நடிகர் கார்த்திக்கும் சிறந்த நடிகைக்கான சிறப்பு பரிசாக மகாமுனி படத்தில் நடித்த நடிகை இந்துஜாவிற்கும், மேலும் சிறந்த வில்லன் நடிகராக கைதி திரைப்படத்தில் நடித்திருந்த அர்ஜுன் தாஸிற்கும் வழங்கப்பட உள்ளது.

மேலும், அதே ஆண்டு சிறந்த படத்திற்கான முதல் பரிசினை அசுரன் திரைப்படமும் இரண்டாவது பரிசினை ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படமும், மூன்றாவது பரிசினை கோமாளி திரைப்படமும் பெற்றிருக்கிறது.

‎‎ 2020 ஆம் ஆண்டு விருது பெறுபவர்களின் விவரம் ‎‎

சிறந்த நடிகருக்கான விருதினை 'சூரரைப் போற்று' திரைப்படத்தில் நடித்த நடிகர் சூர்யாவிற்கும், சிறந்த நடிகைக்கான விருதினை சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளிக்கும். மேலும் அதே ஆண்டு சிறந்த படத்திற்கான முதல் பரிசினை கூழாங்கல் திரைப்படமும் இரண்டாவது பரிசினை சூரரைப் போற்று திரைப்படமும் பெற்றிருக்கிறது. ‎‎

2021ஆம் ஆண்டு விருது பெறுபவர்களின் விவரம்

‎‎ சிறந்த நடிகருக்கான விருதினை சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்த நடிகர் ஆர்யாவிற்கும், சிறந்த நடிகைக்கான விருதினை ஜெய் பீம் திரைப்படத்தில் நடித்த லியோ ஜோஸ்-ம் மேலும் அதே ஆண்டு சிறந்த படத்திற்கான முதல் பரிசினை ஜெய் பீம் திரைப்படமும் இரண்டாவது பரிசினை கடைசி வவசாயி திரைப்படமும் பெற்றிருக்கிறது.

‎‎ 2022ஆம் ஆண்டு விருது பெறுபவர்களின் விவரம்‎

சிறந்த நடிகருக்கான விருதினை டானாக்காரன் திரைப்படத்தில் நடித்த நடிகர் விக்ரம் பிரபுவுக்கும், சிறந்த நடிகைக்கான விருதினை கார்க்கி திரைப்படத்தில் நடித்த சாய் பல்லவிக்கும், அதே ஆண்டு சிறந்த படத்திற்கான முதல் பரிசினை கார்கி திரைப்படமும், இரண்டாவது பரிசினை டானாக்காரன் திரைப்படமும், சிறந்த படத்திற்கான சிறப்பு பரிசினை இரவின் நிழல் திரைப்படமும் பெற்றிருக்கிறது. ‎‎‎

பரிசுத்தொகை குறித்த விவரங்கள் ‎‎‎சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.1 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், சிறப்புப் பரிசாக ரூ.75 ஆயிரமும் மற்றும் பெண்களைப்பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம் சிறப்புப் பரிசு ரூ.1.25 லட்சமும், சிறந்த நடிகர்/நடிகையர், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு முறையே 1 பவுன் தங்கப்பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.

சின்னத்திரை சிறந்த நெடுந்தொடர்களுக்கு முதல் பரிசாக ரூ.2 இலட்சமும், இரண்டாம் பரிசாக‎ரூ.1 இலட்சமும், ஆண்டின் சிறந்த சாதனையாளர் பரிசாக ரூ.1 இலட்சமும், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் பரிசாக ரூ.1 இலட்சமும் சிறந்த கதாநாயகன்/ கதாநாயகி, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு முறையே 1 பவுன் தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது‎‎‎.

இந்த விருதுகளை பிப்ரவரி 13ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குவார்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.