நாம் ஒரு தாய் மக்களே... இலங்கை தமிழர்கள் அகதிகள் அல்ல... நாங்கள் இருக்கிறோம் – தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இலங்கை தமிழர்கள் அகதிகளோ, அனாதைகளோ கிடையாது. நாங்கள் இருக்கிறோம். இலங்கை தமிழர்கள் ஆதரவற்றவர்கள் கிடையாது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 106 முகாம்களில் இலங்கை தமிழர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்ட அடிக்கல் நாட்டினார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இது தொடர்பாக வேலூரில் அருகே மேல்மொனவூரில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமில் விழா நடைபெற்றது.
இலங்கை தமிழர்களுக்காக முதல்கட்டமாக ரூ.142.16 கோடி செலவில் 3,510 புதிய வீடுகள் கட்ட அடிக்கல் நாட்டினார். மேலும், மறுவாழ்வு முகாம்களில் ரூ.30 கோடி மதிப்பிலான இதர அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். மேலும், பி.இ மாணவி ஒருவருக்கு இலவச கல்விக்கான முழு கல்வி கட்டண காசோலையை தமிழக முதலமைச்சர் வழங்கினார். மேலும், அங்கு இலங்கை தமிழர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் பேசுகையில், தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் ஒரு தாய் மக்களே; கடல் தான் நம்மை பிரிக்கிறது. இலங்கை தமிழர் விட்ட கண்ணீர் மறக்க முடியாது. இலங்கை தமிழர்கள் அகதிகளோ, அனாதைகளோ அல்ல. நாங்கள் இருக்கிறோம். இலங்கை தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல. என்னை உங்களின் சகோதரனாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார்.