மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலை – தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி ஆணையை வழங்கினார்
மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் 2020 போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
அதற்கு முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் அவர் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி தமிழகத்திற்கே பெருமை சேர்த்தார்.
கடந்த செப்டம்பர் 6ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் மாரியப்பன். அப்போது, தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில், பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு குரூப் 1 பிரிவில் அரசு வேலைக்கான பணி ஆணையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி இருக்கிறார்.
இதனையடுத்து, தமிழ்நாடு காகித ஆலையின் மார்க்கெட்டிங் பிரிவில் மாரியப்பனுக்கு துணை மேலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.