கோவையில் சீமானுக்கு எதிர்ப்பு தெரிவிக்க முயற்சி செய்த திமுகவினர் குண்டுக்கட்டாக கைது
கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த சீமானுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வந்த திமுகவினரை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்துள்ளனர்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய கைதிகள் மற்றும் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேர் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் கோவையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். இதனையடுத்து, தருமபுரி மாவட்டம் மொரப்பூரில் நாம் தமிழர் கூட்டத்தில் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கு அதிகளவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில், ஆர்ப்பாட்டம் தொடங்குவதற்கு கொஞ்சம் நேரத்துக்கு முன்பாக அங்கு வந்த சிலரை சந்தேகத்தின் பேரில் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது, தாங்கள் திமுனவினர் என்றும் போராட்டம் நடத்த வரவில்லை என்றும் தெரிவித்தார்கள்.
அப்போது, போலீசார் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால், அவர்கள் போகவில்லை. இதனால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர்கள் சீமானுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள்.
இதனால், 8-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். இதனை தொடர்ந்து, திட்டமிட்டபடி சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள சிறை கைதிகளை விடுக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.