சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - போலீசார் அதிரடி
சிறையிலுள்ள யூடியூபர் சாட்டை துரைமுருகன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார். சாட்டை துரைமுருகன் பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த அவர் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்தார்.
இதனையடுத்து, அவர் தனது யூடியூப் சேனல் ஒன்றில் பாஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 9 பேர் இறந்து விட்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இந்த வீடியோ பாஸ்கான் பெண் தொழிலாளர்கள் சாலையில் வந்து போராட்டம் நடத்தியதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்திருந்தது.
இதனால், பொய்யான தகவலை பரப்பி கலவரத்தை தூண்டியதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து, திருச்சியில் உள்ள துரைமுருகன் வீட்டிற்கு சென்ற சைபர் குற்றப்பிரிவு போலீசார் அவரை கடந்த 19ம் தேதி கைது செய்தனர்.
நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு இன்று முதல் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், யூடியூபர் சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டம் பதிவு செய்ய போலீசார் திட்டமிட்டனர்.
அந்த வகையில் சாட்டை துரைமுருகன் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டிருக்கிறார். வன்முறையை தூண்டும் விதத்திலும், நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறியதாலும் அவர் மீது குண்டர் சட்டம் பாயப்பட்டுள்ளதாக திருவள்ளூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.
ஸ்ரீ பெரும்புத்தூர் பாஸ்கான் பெண் தொழிலாளர்கள் உடல் நிலை குறித்து வதந்தி பரப்பிய காரணத்தினால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.