தக்காளி விலை சரிந்தது - கிலோ ரூ.30க்கு விற்பனை - மகிழ்ச்சியில் பொதுமக்கள்
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால், விலை கடுமையாக சரிந்து கிலோ ரூ.30-க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை காரணமாக தக்காளி வரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால், தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்தது. கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த 4 நாட்களாக 1 கிலோ தக்காளி 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், 50 ரூபாய் குறைந்து நேற்று ரூ. 90 க்கு விற்பனையானது.
இந்நிலையில், இன்று தக்காளி அதிரடியாக 100 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் மொத்த விற்பனை 30 முதல் 35 வரை சிறுமொத்த கடைகளில் தக்காளி 1 கிலோ 40 ரூபாய்க்கு இன்று காலை விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
இதுவே ஒரு பெட்டியாக வாங்கினால் 30 ரூபாய் முதல் 35 ரூபாய்க்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று வழக்கமாக ஆந்திரா கர்நாடக மஹாராஷ்டிரா ஆகிய வடமாநிலங்களிலிருந்து மொத்தம் 58 வன்டிகளில் சுமார் 850 டன் தக்காளி வந்துள்ளது. இந்நிலையில் வியாபாரம் இன்று களைகட்ட தொடங்கி இருக்கிறது.