‘இளந்தளிர் கருகுவதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ - சீமான் ஆவேசம்
கோவையில் சின்மயா வித்யாலயா என்ற தனியார்ப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், 'கோவை மாவட்டம், உக்கடம் பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளி ஆசிரியர் கொடுத்தப் பாலியல் தொந்தரவினால் தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து நெஞ்சம் பதைபதைத்துப் போனேன். கோவை சின்மயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டது சற்றே ஆறுதலைத் தந்தாலும், அக்கொடுங்கோலனைச் சட்டத்தின் பிடியிலிருந்தும், தண்டனையிலிருந்தும் தப்பிக்கவிடாது, இனி எவருக்கும் இத்தகைய எண்ணமே எழாதவாறு தடுக்கும் வகையில் மிகக் கடுமையான தண்டனையை உறுதி செய்ய வேண்டும். மாணவியின் மீதே பழி சுமத்தி அப்பிஞ்சை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, இளந்தளிர் கருகுவதற்கு காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.