தான் சேமித்து வைத்த உண்டியல் பணத்தை நீர்நிலையை சீரமைக்க கொடுத்த மாணவன் - மக்கள் பாராட்டு
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியில் நீர்நிலையை சீரமைக்க தனது உண்டியல் சேமிப்பை வழங்கிய பள்ளி மாணவனின் செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பல வருடங்களுக்கு பிறகு ஏரி, குளங்கள் நிரம்பி இருக்கின்றன. ஆனால், ஆலங்குடிக்கு கிழக்குப் பகுதியில் உள்ள கொத்தமங்கலம், குளமங்கலம், கீரமங்கலம், சேந்தன்குடி, நகரம், செரியலூர் உள்பட பல கிராமங்களில் உள்ள நீர்நிலைகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.
இந்நிலையில், வரத்து வாரிகள் இல்லாததால் நீர்நிலைகள் தண்ணீர் இல்லாமல் இருக்கின்றன. இந்நிலையில், கீரமங்கலம் - நகரம் - சேந்தன்குடி ஆகிய கிராமங்களை ஒருங்கிணைக்கும் பெரியாத்தாள் ஏரி தண்ணீர் நிரப்பால் பல கிராமங்களுக்கும் நிலத்தடி நீர் அதிகரிக்கும்.
இதனால் கொத்தமங்கலம் அம்புலி ஆறு அணைக்கட்டிலிருந்து உள்ள பழைய கால்வாயை நீரின்றி அமையாது உலகு என்ற தன்னார்வ இளைஞர் அமைப்பினர் பொதுமக்களிடம் நிதி பெற்று சீரமைத்து வருகிறார்கள்.
இந்நிலையில், கால்வாயை சீரமைக்க கீரமங்கலம் வடக்கு பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவரின் மகன் கிஷோர், தான் உண்டியலில் சேமித்து வைத்திருந்த 1096 ரூபாயை இளைஞர் அமைப்பினரிடம் வழங்கினார். பள்ளி மாணவனின் இச்செயலை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.