ஜெயலலிதா சமாதிக்கு செல்வதால் எனக்கு பாதுகாப்பு வேண்டும் - சசிகலா சென்னை மாநகர காவல் ஆணையருக்கு கடிதம்!
நாளை மறுநாள் எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களுக்கு செல்வதால் பாதுகாப்பு கோரி சசிகலா, சென்னை காவல் ஆணையரிடத்தில் மனு கொடுத்துள்ளார்.
அதிமுகவின் 50வது ஆண்டு பொன்விழா வரும் 17ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில், வருகிற 16ம் தேதி சசிகலா ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்ல உள்ளார். சசிகலா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர், சிறைக்கு செல்லும் முன்பாக ஜெயலலிதா சமாதிக்கு சென்றார்.
இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் அவர் விடுதலையானார். அதிமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால், அவரால் ஜெயலலிதா சமாதிக்கு செல்ல முடியவில்லை.
இந்நிலையில், மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அண்ணா நினைவிடங்களுக்கு நாளை மறுநாள் சசிகலா செல்ல இருக்கிறார். இதனால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணையரிடம் கடிதம் கொடுத்துள்ளார்.
இது குறித்து காவல் ஆணையரிடத்தில் அளித்துள்ள மனுவில், 'வரும் 16ம் தேதி காலை 10 மணியிலிருந்து 12:00 மணிக்குள்ளாக அதிமுக பொதுச் செயலாளர் திருமதி வி கே சசிகலா சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள புரட்சித்தலைவி அம்மா புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். அதற்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
