இது நல்லா இல்லை... நிறுத்திவிடுங்க... சசிகலா! நான் பலமுறை சொல்லியும் கேட்கவில்லை - சீமான்
சொத்து வழக்கில் கைதாகி 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த சசிகலா, சிறையிலிருந்து விடுதலையாகி சென்னை தி. நகர் இல்லத்திற்கு வந்தார். அப்போது, அவரை சந்தித்து பேசினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
சிறையிலிருந்து வந்த சசிகலா அரசியலில் ஈடுபட்டு பட்டைய கிளப்புவார் என்று எதிர்பார்த்த தருணத்தில், அரசியலிலிருந்து ஒதுங்கி ஆன்மீகத்தில் ஈடுபட போவதாக, கோயில் கோயிலாக சென்று வந்தார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. தற்போது, சசிகலா மீண்டும் அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் அமமுமுக என்ற கட்சியை நடத்தி வரும் நிலையில் அதிமுகவுக்கு தலைமை ஏற்று நடத்துவேன் என்று சபதம் செய்துள்ளார் சசிகலா.
இதனையடுத்து, அவர் தினமும், அதிமுக தொண்டர்களிடம் தொலைபேசியில் பேசி வருவதாக ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அதிமுக தலைமைக்கழகம், சசிகலாவிடம் பேசுவோரை கட்சியை விட்டு நீக்கி வருகிறது. இந்நிலையில், சசிகலாவின் இந்த ஆடியோ விவகாரம் குறித்து சீமான் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், ‘இது நல்லா இல்லை. நிறுத்திவிடுங்க என்று நான் பலமுறை சசிகலாவிடம் கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர் தொடர்ந்து கொண்டே இருக்கிறார். மேலும், இப்படி ஆடியோ வெளியிடுவது சரியான முறை கிடையாது. உளவுத்துறைகூட நான் பேசுவதை பதிவு செய்து வைத்துக்கொள்ளுமே தவிர வெளியிடாது.
அப்படி இருக்கும்போது ஒரு தலைவர் என்று மதித்து அவரிடம் பேசுவதை அதனை அப்படியே பதிவு செய்து பொதுவெளியில் வெளியிடுவது நாகரீகமற்ற செயல். அது அவமானமானது.
இது தலைமை பண்புக்கு உகந்தது கிடையாது. தொண்டர்களை சந்தித்து பேச வேண்டுமென்றால் ஒரு அறிக்கை வெளியிட்டு விட்டு, கட்சியை வழி நடத்துவேன் என் மீது நம்பிக்கை இருந்தால் புரட்சித் தலைவர் மீதும் புரட்சித்தலைவி மீதும் பாசம் கொண்ட தொண்டர்கள் இந்த தேதியில் இந்த இடத்திற்கு வாருங்கள் என்று கூறி விட்டு நேரடியாக தொண்டர்களிடம் பேசுவதுதான் சரியாக இருக்கும்.
அதை விட்டு விட்டு யார் யாரிடமோ பேசி அதை எல்லோருக்கும் பரப்பி. இப்படியான செயல் நாகரீகமான செயலாகப் தெரியவில்லையே என்றார்.