மரத்தின் உச்சிக்கு மேல் உட்கார்ந்து கொண்டு வேர்களாக இருக்கும் தொண்டர்களை நீக்குவது தவறு : சசிகலா ஆடியோ ரிலீஸ்!
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைக்கு சென்று திரும்பினார் சசிகலா. அரசியலில் இறங்கி பட்டையை கிளப்புவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசியலை விட்டு ஒதுங்கி ஆன்மீக பயணத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தார்.
இதனையடுத்து, அவர் கோவில் கோவிலாகச் சென்று சாமி தரிசனம் செய்தார். அதற்கு அடுத்து, தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. திமுக சட்டமன்ற பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
தற்போது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமியும், துணை எதிர்க்கட்சித் தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக சசிகலாவின் ஆடியோ வெளிவந்து அதிமுகவினரிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்த ஆடியோ, அதிமுக தலைமைக்கு தெரியப்படுத்தும் விதமாக தொண்டர்களிடம் சசிகலா பேசி, அந்த ஆடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்.
இது தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய ஓபிஎஸ் – ஈபிஎஸ் சசிகலாவிடம் பேசுபவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என அதிரடியாக அறிவித்தனர்.
இதனையடுத்து, பல நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். நேற்றும் கூட 5 நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இருப்பினும், சசிகலா அதிமுக தொண்டர்களிடம் பேசுவதை நிறுத்திக்கொள்வதாக தெரியவில்லை.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதியைச் சேர்ந்த பெரிய ராஜ் என்பவரிடம் சசிகலா பேசிய ஆடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
அந்த ஆடியோவில், கட்சி வளர வேர்கள் போல் காரணமாக இருக்கும் தொண்டர்களை மரத்தின் உச்சிக்கு மேல் உட்கார்ந்து கொண்டு நீக்குவது தவறு. தொண்டர்கள் தியாகத்தினால் தான் கட்சி மாபெரும் சக்தியாக உள்ளது.
தொண்டர்களை நீக்குவது எவ்வளவு பெரிய தவறு என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். நிச்சயமாக நான் வருவேன். அம்மா போல நானும் கட்சியை வழி நடத்துவேன். தொண்டர்களின் ஆதரவோடு அதை செய்வேன் என்று அந்த ஆடியோவில் கூறியிருக்கிறார்.
