சாட்டை துரைமுருகன் கைது! 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு - சீமான் கடும் கண்டனம்

tamilnadu-samugam-politics
By Nandhini Jun 12, 2021 05:08 AM GMT
Report

நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில இளைஞர் அணியை சேர்ந்தவர் சாட்டை துரைமுருகன். திருச்சியில் கார் நிறுவன ஊழியரை மிரட்டிய புகாரில் இவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.இதில் சம்பந்தப்பட்டவர்கள் 7 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விடுதலை புலிகள் பிரபாகரன் குறித்து திருச்சியை சேர்ந்த வினோத் என்பவர் செய்த ட்வீட் காரணமாக திருச்சியில் அவர் பணியாற்றும் கார் நிறுவனத்தில் மிரட்டப்பட்டார். யூடியூபர் துரைமுருகன் மற்றும் சிலர் கூட்டாக சென்று வினோத்தை மன்னிப்பு கேட்கும்படி மிரட்டி உள்ளனர். நாம் தமிழர் கட்சியினருடன் சேர்ந்து சாட்டை துரைமுருகன் போலீசார் முன்னிலையிலேயே மிரட்டி வீடியோ எடுத்துள்ளார்.

இந்நிலையில், திருச்சியில் கடை உரிமையாளர் போலீசில் சாட்டை துரைமுருகன் மீது புகார் கொடுத்தார். இதனையடுத்து, இந்த விவகாரத்தில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது குழந்தைகள் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு -

தமிழ்த்தேசிய இனத்தின் ஒப்பற்ற எம் தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களைப் பற்றி மிகவும் இழிவாகப் பதிவுகள் இட்ட திருச்சியைச் சேர்ந்த வினோத் என்பவரை நேரடியாகச் சந்தித்து, புரிதல் ஏற்படுத்தி காவல்துறை முன்னிலையில் மறுப்பு காணொளி வெளியிட வைத்த ஊடகவியலாளர் சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த திருச்சி மேற்கு மாவட்டச் செயலாளர் வினோத், மாநிலத் தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர் சந்தோஷ் என்ற மகிழன், மாநிலக் கொள்கை பரப்புரையாளர் திருச்சி சரவணன் ஆகியோரை காவல்துறை திடீரென கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

மாற்றுக் கருத்து கொண்டவருக்குப் புரிதல் ஏற்படும் வண்ணம் நேரடியாகச் சென்று விளக்கமளித்து அவருக்குப் புரிதலை ஏற்படுத்திக் காவல்துறை முன்னிலையில் எவ்விதமான வற்புறுத்தலும் இல்லாமல் புரிதலின் அடிப்படையில் மறுப்பு காணொளி வெளியிட செய்வதென்பது கருத்துரிமை சார்ந்த செயல்பாடு. இதை மாபெரும் குற்றம் எனக்கருதி, தம்பிகளை கைது செய்திருப்பது என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட செயல்.

சட்டத்திற்குப் புறம்பாக தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ள தம்பிகள் சாட்டை துரைமுருகன், வினோத், சந்தோஷ் என்ற மகிழன், சரவணன் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.