கோவை அருகே பெரியார் சிலை அவமதிப்பு - 2 பேர் கைது
கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை அருகே பெரியார் சிலை 2 நாட்களுக்கு முன்பு அவமதிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் குற்றவாளிகளை சிசிடிவி கேமரா மூலமாக ஆய்வு செய்து தேடி வந்தனர்.
இந்நிலையில், கோவை வெள்ளலூர் பேருந்து நிலையம் முன் பெரியார் சிலை உள்ளது. இந்த சிலைக்கு கடந்த 8ம் தேதி இரவு நேரத்தில் மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்து அவமரியாதை செய்தனர்.
இது தொடர்பாக தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மற்றும் செல்போன் தொடர்புகளை வைத்து விசாரணை நடத்தினர். இதில் அந்த பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அருண் கார்த்திக் (26) மற்றும் அவரது நண்பர் மோகன் ராஜ் (28) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த இருவரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.