‘துளி கூட மாறாத நடிகை மீரா மிதுன்...’ - சம்மன் அனுப்பிய நீதிமன்றம் - ஜாமீன் ரத்தாக வாய்ப்பு

meera-mithun tamilnadu-samugam- samman
By Nandhini Dec 18, 2021 04:08 AM GMT
Report

பட்டியலினத்தவரை அவதூறாக பேசியதாக எழுந்த புகாரையடுத்து, தொடரப்பட்ட வழக்கின் குற்றப்பத்திரிகை நகல் பெறுவதற்காக நடிகை மீராமிதுன் ஆஜராகாததால் ஜனவரி 11ம் தேதி ஆஜராகும்படி மீண்டும் சம்மன் அனுப்ப சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய நடிகை மீராமிதுன், அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இது பெரிய சர்ச்சையாக மாறியது. இதனையடுத்து, அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பலர் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரையடுத்து, வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தில் கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப் பிரிவு வழக்கு பதிவு செய்து மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக்கை கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் இருவருக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி இருக்கிறது.

இதற்கிடையில் இருவர் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்கள். அதன் நகல்களை கொடுப்பதற்காக நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் நேற்று (டிசம்பர் 17) நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால், இந்த வழக்கு சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.சந்திரசேகர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சாம் அபிஷேக் மட்டும் ஆஜரான நிலையில், மீரா மீதுன் ஆஜராகவில்லை.

அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் சுதாகர், ஜாமீன் வழங்கியபோது ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 10.30 மணிக்கு விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையையும் மீரா மிதுன் நிறைவேற்றவில்லை என்று தெரிவித்தார்.

அப்போது நீதிபதி, நிபந்தனையை நிறைவேற்றவில்லை ஏன்றால் ஜாமீனை ரத்து செய்ய கோரி மனுத்தாக்கல் செய்யலாம் என்று காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து, வழக்கு விசாரணையை ஜனவரி 11ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்று ஆஜராகும்படி மீரா மீதுனுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். 

‘துளி கூட மாறாத நடிகை மீரா மிதுன்...’ - சம்மன் அனுப்பிய நீதிமன்றம் - ஜாமீன் ரத்தாக வாய்ப்பு | Tamilnadu Samugam Meera Mithun Samman