ஜெயலலிதா நினைவிடம் செல்கிறார் சசிகலா : காரணம் இதுதானாம்!
வரும் 17ம் தேதி அதிமுகவின் 50 ஆண்டு தொடக்க விழாவாக பொன்விழா கொண்டாட உள்ளது. இதற்காக பேரூராட்சி, ஊராட்சி, மாவட்டம், வட்டம், பகுதி என அனைத்து இடங்களிலும் அதிமுக கொடி கம்பத்தில் அக்கட்சியின் கொடியேற்றி, இனிப்புகள் வழங்க தலைமை கழகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
இச்சூழலில் சசிகலா வரும் 17ம் தேதி ஜெயலலிதா நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்த இருக்கிறார். சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்வது இதுவே முதல்முறையாகும். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்ற சசிகலா 4 ஆண்டுகள் கழித்து கடந்த பிப்ரவரி மாதம் விடுதலை செய்யப்பட்டார்.
அதனையடுத்து, அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கி கொள்வதாக அறிவித்தார். சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியது.
இதனையடுத்து, தனது முடிவிலிருந்து பின்வாங்கிய அவர் அக்கட்சியின் முன்னாள் நிர்வாகிகள் ,தொண்டர்களுடன் தொலைபேசி வாயிலாக பேசி வருகிறார்.
இருப்பினும் இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், சிறையிலிருந்து வெளியே வந்த பின் ஜெயலலிதா நினைவிடத்திற்கு, சசிகலா முதல் முறையாக செல்ல இருக்கிறார்.
இதனையடுத்து, சென்னை ராமாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லத்திற்கும் சசிகலா சென்று அவரது சிலைக்கு மரியாதை செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.