ஆயிரம் கிலோ மீன், 200 கிலோ இறால் என வண்டி வண்டியாக மருமகனுக்கு ஆடி சீர் செய்து அசத்திய மாமனார்!
தமிழர்கள் ஆடி சீர் கொடுத்து கொண்டாடுவதை போல் தெலுங்கு மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு மாதமான ஆஷாதம் (ஜூன் / ஜூலை மாதங்களில்), ‘பொனாலு’ என்ற ஆஷாதம் பாரம்பரிய நாட்டுப்புற விழாவை கொண்டாடுவது வழக்கம். புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் ஆஷாதம் ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆந்திராவின் அருகாமையில் அமைந்துள்ள புதுவையின் அங்கமான ஏனாமை சேர்ந்த பவன் குமார் என்பவருக்கு ராஜமுந்திரியைச் சேர்ந்த அவரது மாமனார் பலராம கிருஷ்ணா வித்தியாசமான முறையில் சீர் கொடுத்து அனைவரையும் அசத்தியிருக்கிறார்.
தனது மகள் பிரத்யுஷாவை மருமகன் சிறப்பாக கவனித்து வருவதால், மகிழ்ச்சி அடைந்த மாமனார் ஆயிரம் கிலோ மீன், 200 கிலோ இறால், 10 ஆடுகள், 50 கிலோ கோழி, ஆயிரம் கிலோ காய்கறிகள், 50 வகையான இனிப்புகள் என வண்டி வண்டியாக மணமகன் வீட்டிற்கு ஊர்வலமாக எடுத்து வந்துள்ளார். இதனை அந்த ஊரில் வசிப்பவர்கள் மருமகன் வீட்டிற்கு வந்து கண்டு ஆச்சரியப்பட்டனர்.
இது குறித்து மாமனார் பேசுகையில், என் மகளை என் மருமகன் அன்போடு கவனித்து வருவதால், எங்கள் அன்பை காட்டும் விதமாக நாங்கள் சீர் செய்துள்ளோம். இனிப்பு, காரம், சத்துள்ள உலர்பழங்கள், மசாலா பொருட்கள், காய்கறிகள், அசைவங்களான ஆடு, கோழி, மீன் மற்றும் கடல் உயிரினங்கள், மளிகை பொருட்கள் என வாரி வழங்கி இருக்கிறோம் என்று முகத்தில் அவ்வளவு புன்னகையோடு கூறினார்.