அண்ணாமலையார் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் - பக்தர்களிடம் கைகொடுத்து உரையாடினார்
இன்று துர்கா ஸ்டாலின் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு, நவம்பர் 19ம் தேதி அதிகாலை அண்ணாமலையார் கோவில் கருவறையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதன் பின்பு, அன்று மாலை கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயரம் கொண்ட மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது.
கொரோனா பரவல் காரணமாக இந்த மகா தீப திருவிழாவில் பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. கட்டளைதாரர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
மகா தீபத் திருவிழா நிறைவடைந்த நிலையில் தற்போது உற்சவம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வருகை தந்தார்.
அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனை சிறப்பு வழிபாடுகள் செய்து, சிறப்பு அபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு வருகை தந்த துர்கா ஸ்டாலினுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கும்ப மரியாதை வழங்கப்பட்டது. சாமி தரிசனத்தின் போது உடன் தரிசனம் செய்த பக்தர்கள் உடன் கைகொடுத்து அவர்களுடன் உரையாடினார்.