வலி தந்த இழப்புகள் மாறி, வலிமையையும் வளங்களையும் இத்திருநாள் கொண்டுவரட்டும் - டிடிவி தினகரன் வாழ்த்து
வலி தந்த இழப்புகள் மாறி, வலிமையையும் வளங்களையும் இத்திருநாள் கொண்டுவரட்டும் என்று அனைவருக்கம் நெஞ்சார்ந்த தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது -
"ஆணவமும், அகங்காரமும் அழிந்து, மகிழ்ச்சியும் நிம்மதியும் மக்களிடம் தழைத்திட வேண்டும் என்பதுதான் தீப ஒளி திருநாளின் அடிப்படை தத்துவமாகும். ‘அதர்மம் என்றைக்கும் நிலைத்ததில்லை’ என்பதை உலகுக்கு உணர்த்தும் இந்த நன்னாளில், தீமைகள் அனைத்தும் விலகி, தர்மம் செழிக்க வேண்டும். ஒவ்வொருவரின் வீடுகளிலும் ஆரோக்கியமும், அன்பும், மகிழ்ச்சியும் நிறைந்திட வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தீபாவளியில் பரவுகிற புதிய வெளிச்சம் புதிய வெற்றிகளுக்கான பாதைகளை உருவாக்கட்டும். கொரோனா பெருந்துயரில் இருந்து முழுமையாக மீண்டுவிடுவோம் என்ற நம்பிக்கை விரைவில் நனவாகட்டும்.
வலி தந்த இழப்புகள் மாறி, வலிமையையும் வளங்களையும் இத்திருநாள் கொண்டுவரட்டும். அகத்திலும், புறத்திலும் இருள் அகன்று அனைவரும் ஆனந்தமாக வாழ்ந்திட தீபாவளி நாளில் வாழ்த்தி மகிழ்கிறேன்"
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.