“அக்டோபர், நவம்பர் மாதத்துக்குள் கொரோனா 3-வது அலை அதிக வீரியத்துடன் தாக்கும்” - ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்!
இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதத்துக்குள் கொரோனா தொற்றின் 3-வது அலை அதிக வீரியத்துடன் தாக்கும் என்று மருத்துவத்துறை ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.
தற்போது, இந்தியாவில் கொரோனா 2ம் அலையின் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா 3-வது அலை வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் உச்சத்தை அடையும் என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில் கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட விஞ்ஞானிகள் குழு தகவல் தெரிவித்துள்ளது.
நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் தடுப்பூசியின் செயல் திறன் இழப்பு, புதிய உருமாறிய கொரோனா உள்ளிட்ட பல காரணிகள் இதில் இந்த ஆய்வில் கருத்தில் எடுத்து கொள்ளப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
தடுப்பூசி அனைவருக்கும் செலுத்தும் பட்சத்தில், கொரோனாவின் மூன்றாவது மற்றும் நான்காவது அலையால் எந்தப் பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், 3-வது அலையில் தினசரி பாதிப்பு என்பது 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை இருக்கும் என அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது. 3-வது அலை அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உச்சத்தை அடையும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாவிட்டால் தினசரி பாதிப்பு ஒன்றரை லட்சம் முதல் 2 லட்சம் வரை உயரக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது. கொரோனா 2-வது அலை மே மாதத்தில் உச்சத்தை அடைந்தபோது மே 7-ம் தேதி மட்டும் சுமார் 4 லட்சத்து 14 ஆயிரத்து 188 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக அந்த குழு சுட்டிக்காட்டி குறிப்பிட்டுள்ளது.