“உண்மைய ஒத்துக்கலேனா... கடும் நடவடிக்கை பாயும்” – பா.ரஞ்சித்துக்கு அதிமுக எச்சரிக்கை நோட்டீஸ்!
நடிகர் ஆர்யா நடிப்பில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘சார்பட்டா பரம்பரை’. இந்தப் படத்தில் முழுவதும் 70களில் வடசென்னையில் நடைபெற்று வந்த ரோஷமான ஆங்கில குத்துச்சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
அந்தக் காலக்கட்டத்தில் அரசியல் கட்சிகளின் பேராதரவோடு இந்தக் குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றதால் அரசியல் கட்சிகள் குறித்த காட்சிகள் அதிகம் இடம்பிடித்துள்ளன. மற்ற படங்களைப் போல் ஜிகினா கொடிகளைக் காண்பிக்காமல் அதிமுக, திமுக கொடி, சின்னம் என ஒரிஜினலாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதிமுகவை மிக நுணுக்கமாக விமர்சிக்கும் காட்சிகளும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. ‘சார்பட்டா பரம்பரை’ படம் திமுகவினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் அதிமுகவினருக்கு சற்று சடங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்படம் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ‘சார்பாட்டா பரம்பரை’ திரைப்படத்தில் எம்ஜிஆருக்கும் விளையாட்டுத் துறைக்கும் தொடர்பே இல்லாதது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்படம் முழுவதும் திமுக பிரச்சார படமாகவே காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. பா.ரஞ்சித்துக்கு அதிமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
வரலாற்றுப் படம் என்று கூறிவிட்டு உண்மைக்குப் புறம்பான காட்சிகளைக் கொண்டு மக்களிடம் பொய்ச்செய்தியை பா.ரஞ்சித் பரப்பி உள்ளார். காட்சிகள் அனைத்தும் பொய்யானவை என மக்களிடம் வெளிப்படையாக பா.ரஞ்சித் அறிவிக்க வேண்டும். அதேபோல உண்மையை ஒப்புக்கொள்ளாவிட்டால் குற்ற நடவடிக்கை அதிமுக எடுக்கும் என்றார்.