சீமான் அண்ணனுக்கு ஒரு பயம் வந்துவிட்டது! ‘மேதகு’ பட இயக்குநர் கிட்டு பேட்டி!
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் இளமைக்காலம் மற்றும் அவர் எப்படி ஆயுதம் ஏந்தி போராட மனதளவிலும், உடலளவிலும் தயார் ஆனார் என்பதை சொல்லும் படமாக வெளியாகி உள்ளது மேதகு திரைப்படம்.
இப்படம் BS Value ஓடிடிதளத்தில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு பல்வேறு தரப்பினரிடையேயும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் கிட்டு ஒரு பத்திரிகை செய்தியாளரிடம் படத்தை பற்றி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது -
2009ல் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்குப் பிறகு மனதில் ஒரு ஆசை இருந்தது. இந்த விஷயங்களை நாம் ஏன் படமாக்கக் கூடாது என்று யோசித்தேன். அதற்குப் பின்னணியில் இருந்த அரசியல் என்ன என்பதை நன்றாக யோசித்தேன். அதனால்தான் நான் சின்ன சின்ன குறும்படங்கள் எடுக்க ஆரம்பித்தேன்.
பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வெளியான போது எனக்கு கோபம் அதிகமானது. அதிகாரங்கள் மீது மிகப்பெரிய கோபம் வந்தது.
ஆனால், திரைத்துறைக்கு வருவேன் என்று நான் பெரிய அளவில் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
ரைஸ் ஆஃப் கரிகாலன் என்ற குறும்படத்தை எடுத்தோம். அந்த குறும்படத்தின் கிளைமாக்ஸை பெரிய அளவில் டெவலப் செய்தால் என்ன? என்ற டிஸ்கஷனுக்கு பிறகு பிறகுதான் மேதகு படம் உருவானது.
அப்போது செய்தியாளர், தலைவரை பற்றி அவர்களுக்கு என்ன தெரியும் என்று கூறியுள்ளது போல சீமான் ஆடியோ வெளியானது. எல்லா இடங்களிலும் பிரபாகரன் பெயரை முழங்க கூடிய அவர், இந்த படத்தை கொண்டாடாமல் விமர்சித்துள்ளாரே? என்று கேட்டார்.
அதற்கு இயக்குநர் கிட்டு, “நாங்கள் சீமான் அண்ணனுடன் தான் பயணம் செய்தோம். ஆனால் சில காரணத்தால் கட்சியிலிருந்து விலகிவிட்டோம். அண்ணனுக்கு ஒரு பயம் வந்திருக்கும். இவர்கள் எப்படி தலைவரை காண்பிப்பார்கள். ஒருவேளை தவறாக காண்பித்து விடுவார்களோ என்ற பயம் இருந்திருக்கும்.
அதனால்தான் அந்த ஆடியோ கூட வெளியாகி இருக்கலாம். என் எண்ண ஓட்டம் அப்படித்தான் இருந்தது. ஆனால் அண்ணன் படம் பார்த்து விட்டார் என்றார்.