கோவையில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம் - 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - சாணிப்பவுடர் குடித்து தற்கொலை முயற்சி
பக்கத்து வீட்டுக்காரர் பாலியல் தொல்லை கொடுத்ததால் 9ம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியைச் சேர்ந்தவர் 14 வயது மாணவி. இவர் அரசு உயர்நிலை பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை அவர் வழக்கம்போல பள்ளிக்கு சென்றுள்ளார்.
மதியம் சாப்பாடு இடைவேளையின் போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய மாணவியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, விசாரித்ததில் சாப்பாட்டில் சாணி பவுடரை கலந்து கொண்டு அவர் தற்கொலைக்கு முயற்சி செய்தது தெரியவந்தது. மருத்துவமனையில் மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். போலீசார் நடத்திய விசாரணையில், மாணவியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் திருமணமான 37 வயது நபர் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது. இதனால், மனமுடைந்த மாணவி பள்ளியில் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவையில் 12ம் வகுப்பு மாணவி ஒருவர் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவத்தினால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு மாணவியை பாலியல் தொல்லையால் தற்கொலைக்கு முயன்றது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.