இவங்க தான் ரியல் ஹீரோ - தோளில் சுமந்து உயிரை காப்பாற்றி பெண் ஆய்வாளருக்கு அன்புமணி பாராட்டு
சென்னையில் கல்லறையில் உயிருக்கு போராடிய நபரை தோளில் தூக்கி சென்று மருத்துவமனையில் சேர்த்த பெண் காவல் ஆய்வாளருக்கு பாராட்டுகள் என்று அன்புமணி தெரிவித்திருக்கிறார்.
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள கல்லறையின் மீது இளைஞர் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்தார். அவர் மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்துவிட்டார் என்று அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டிபி சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, இளைஞர் உயிருடன் இருப்பதை தெரிந்து கொண்டு, உடனடியாக அவரை தனது முதுகில் சுமந்து சென்று ஆட்டோவில் ஏற்றி சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தக்க நேரத்தில் இளைஞரை காப்பாற்ற முதுகில் சுமந்து சென்று மருத்துவமனையில் அனுமதிக்க உதவிய ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், சென்னை டி.பி.சத்திரத்தில் மரம் முறிந்ததில் இறந்து விட்டதாக கருதப்பட்டவரை , வெற்றுக் கால்களுடன் தோளில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றிய அண்ணாநகர் காவல் ஆய்வாளர் இராஜேஸ்வரிக்கு பாராட்டுகள். சினிமாவில் பலர் ரீல் ஹீரோ... களத்தில் இவர் ரியல் ஹீரோ! ஆய்வாளர் இராஜேஸ்வரி வட சென்னையில் பல இடங்களில் பணியாற்றிய போது அவர் ஆற்றிய மக்கள் நலப் பணிகளையும், கொடிய குற்றவாளியை கைது செய்ததற்காக வீரதீர பதக்கம் பெற்றவர் என்பதையும் நான் அறிவேன். அர்ப்பணிப்புடன் கூடிய காவல் பணிக்கு அவர் சிறந்த முன்னுதாரணம்! என்று பதிவிட்டுள்ளார்.