சென்னையில் சிறப்பு மருத்துவ முகாம் - தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
மழையால் பரவும் தொற்று நோய்களை தடுக்கும் வகையில் சென்னையில் சிறப்பு மருத்துவ முகாமை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால், வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக சென்னை மாநகரில் கடந்த 6ம் தேதி முதல் பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
இதனால் சென்னை முழுவதும் சாலைகளிலும், வீடுகளிலும் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக மாறியது. இந்நிலையில், சாலைகளில் தேங்கிய மழை நீரில் கொசு உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இதை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது.
அந்த வகையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்த சிறப்பு மருத்துவ முகாம் மூலம் பொதுமக்களுக்கு தேவையான மருந்துகள் உள்ளிட்டவற்றை சுகாதாரத்துறை சார்பில் மாநகராட்சி ஊழியர்கள் வழங்க இருக்கிறார்கள். காய்ச்சல் உள்ளதா? என பரிசோதனை செய்வதோடு பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனையும் இந்த சிறப்பு முகாம் மூலம் நடத்தப்பட இருக்கிறது.