2015ம் ஆண்டு வெள்ளத்திற்கு பிறகு என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? - ஐகோர்ட் அதிருப்தி
கடந்த 2015ம் ஆண்டில், சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பிறகு என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று தமிழக அரசையும், சென்னை மாநகராட்சியையும் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது.
சென்னையில் 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சாலைகளை அகலப்படுத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கூறுகையில், கடந்த 2015ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பிறகு என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?. அப்போது வெள்ளத்தை சந்தித்தது போன்று, தற்போது சென்னை தத்தளித்து வருகின்றது. ஒரு வாரத்தில் நிலைமை சீராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையை தொடுக்கும் என்றார்.