உதயநிதியின் தீவிர ரசிகர் செய்த காரியம் - மிரண்டு போன போலீசார்
முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சமையல்காரரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று பேசிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு நாளை வெடிகுண்டு வைக்கப்போவதாக மிரட்டல் விடுத்துவிட்டு இணைப்பைத் துண்டித்து விட்டார்.
இதனையடுத்து, இது குறித்து தகவல் அறிந்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மிரட்டல் விடுத்த நபரின் இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர். வண்டலூரை அடுத்த மாம்பாக்கம் பகுதியில் பேசியிருக்கிறார் என்பது கண்டறியப்பட்டு, தேனாம்பேட்டை போலீசார் அங்கு சென்று அந்நபரை கைது செய்தார்கள்.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவரது பெயர் பழனிவேல் என்பது தெரியவந்தது. அவர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சென்னையில் தங்கியிருந்து சமையல் வேலை பார்த்து வந்துள்ளார்.
குடிபோதையில் முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும், தான் உதயநிதி ஸ்டாலினின் தீவிர ரசிகர் என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், உதயநிதி படத்தில் தனக்கு பட ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். அதற்காகத்தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக போலீசாரிடம் கூறியுள்ளார். கைதான பழனிவேலை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.