இன்று டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் மெரினா கடற்கரையில் ‘உயிர்காக்கும் பிரிவு’ தொடக்கம்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தமிழ்நாடு காவல்துறை மானியக் கோரிக்கையின்போது சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் நீரில் மூழ்கி இறக்கும் நிகழ்வுகளை தடுக்க சென்னை காவல் துறையில் மெரினா கடற்கரை உயிர்காப்பு பிரிவு ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு, இத்திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்நிலையில், இன்று டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில், காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முன்னிலையில், மெரினா கடற்கரையில், ‘உயிர்காக்கும் பிரிவு’ தொடங்கப்பட்டிருக்கிறது.
மெரினா கடற்கரையின் உயிர்காப்பு பிரிவின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக கடலோர பாதுகாப்பு கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் செயல்படுவார் என்றும், தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினரை ஒருங்கிணைத்து, கடலோர காவல்படை ஆய்வாளர் தலைமையில் இயங்கும். மெரினா கடற்கரை உயிர் காப்பு பிரிவில் கூடுதலாக 30 பயிற்சி பெற்ற மீனவ இளைஞர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மெரினா கடற்கரையில் சமீப நாட்களாக உயிரிழப்புகள் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், இந்த பிரிவு தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.