தலையில் மண் பாண்டை சுமந்து வேலை செய்த அமைச்சர் - வியந்துபோன தூய்மை பணியாளர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்
திட்டக்குடியில் தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர் சி.வெ.கணேசன் தூய்மை பணியில் ஈடுபட்டதை பொதுமக்கள் வியந்து பார்த்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கி உள்ளது. இதனால், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், அனைத்து இடங்களையும் தூய்மையாக வைத்திருக்க தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சரின் இந்த உத்தரவின் பேரில், திட்டக்குடி பகுதியில் நேற்று குப்பைகளை அகற்றும் பணிகளும் வாய்க்காலில் அடைப்புகளை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. அந்த பணிகளை திட்டக்குடி சட்டப்பேரவை உறுப்பினரும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சருமான அமைச்சர் சி.வெ கணேசன் நேரில் சென்று பார்வையிட்டார்.
திட்டக்குடி பேருந்து நிலையத்திலிருந்து வட்டாட்சியர் அலுவலகம் வரை அனைத்து இடங்களிலும் உள்ள குப்பைகளை அகற்ற உத்தரவிட்டுள்ளார். சாலையோரம் குவிந்திருந்த மண்ணை அகற்ற வேண்டும் என்றும் சாலையோரம் இருக்கும் முட்புதர்களை அகற்ற வேண்டும் என்றும் நெடுஞ்சாலை துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
நெடுஞ்சாலை துறையினர் பணியில் ஈடுபட்டிருந்த போதே அமைச்சரும் மண்வெட்டியால் புதர்களை அகற்றி பாண்டு மூலம் தலையில் மண்ணை சுமந்து சென்று சுத்தம் செய்தார். பிறகு, பணியில் ஈடுபட்ட உரிமையாளர்கள் மற்றும் நெடுஞ்சாலை பணியாளர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.