தொழிலாளி கொலை வழக்கு - ஆஜரான திமுக எம்.பி. ரமேஷுக்கு நீதிமன்ற காவல்
முந்திரி ஆலையில் வேலை செய்த தொழிலாளி மரணமடைந்தார். இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில்திமுக எம்.பி. ரமேஷ் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இதயைடுத்து அவர் பண்ருட்டி நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். அவரை 3 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
கடலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும் திமுகவைச் சேர்ந்தவருமான ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் வேலை செய்த கோவிந்தராஜ் என்ற ஊழியரை அடித்துக் கொலை செய்ததாக எம்.பி. ரமேஷ் மீதும், மேலும் 5 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யதுள்ளது சிபிசிஐடி போலீஸ்.
இதனையடுத்து, அக்டோபர் 9ம் தேதி காலை இவ்வழக்கில் தொடர்புடைய நடராஜன், கந்தவேல், அல்லா பிச்சை, வினோத், சுந்தர் என்கிற சுந்தர் ராஜன் ஆகிய 5 பேரை கடலூர் மாஜிஸ்திரேட் முன்பு போலீசார் ஆஜர்படுத்தி அதனையடுத்து விருத்தாசலம் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள எம்.பி. ரமேஷை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் முயற்சிகள் மேற்கொண்டார்கள். இந்நிலையில், பண்ருட்டி நடுவர் நீதிமன்ற நிதிபதி கற்பகம் முன்னிலையில் ரமேஷ் சரண் அடைந்தார். பொறுப்பு நீதிபதி கற்பகவள்ளி அவரை அக்.13 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இவரை போலீஸ் காவலில் எடுக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டு வருகிறது.