பயங்கர கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வானதி சீனிவாசன் மகன்!
சேலம் அருகே, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் மகன் சென்ற கார் மேம்பால தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வானதி சீனிவாசனின் மகன் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளார். கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் மகன் ஆதர்ஸ் (22).
இவர், நேற்று நள்ளிரவு கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்கு காரில் வந்துக் கொண்டிருந்தார். அப்போது, கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள பட்டர்பிளை மேம்பாலத்தில் கார் அதிவேகமாக வந்தது.
அப்போது, கார் தடுப்புச் சுவர் மீது மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகீழாக கவிழ்ந்து, சிறிது தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டது.
இது குறித்து அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலுசார் ஆதர்சை மீட்டனர். இந்த விபத்தில் நல்லவேளையாக எந்தவித காயமுமின்றி ஆதர்ஸ் உயிர் தப்பியுள்ளார். இது குறித்து தகவலறிந்த பாஜக நிர்வாகிகள், ஆதர்சை மற்றொரு காரில் சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள்.