ஓரினச் சேர்க்கையாளர்களை யாராவது துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை பாயும் – ஹைகோர்ட் எச்சரிக்கை!

tamilnadu-samugam
By Nandhini Sep 01, 2021 09:46 AM GMT
Report

மதுரையை சேர்ந்த 2 பெண்கள் நட்புடன் பழகி வந்தனர். அவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இணை பிரிய மனமில்லாத இருவரும் சேர்ந்து வாழ ஆசைப்பட்டனர். இதற்கு இரண்டு பேரின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து, இருவரும் மதுரையிலிருந்து சென்னை வந்து, தொண்டு நிறுவன காப்பகத்தில் தங்கி வேலை தேடினார்கள். இந்நிலையில், இருவரையும் காணவில்லை என பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். இந்த புகார் வழக்கை பதிவு செய்த போலீசார் இருவரையும் தேடி வந்தனர்.

இதனையடுத்து, தங்களை துன்புறுத்தக் கூடாது என்றும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் இரு பெண்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள்.

ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளை அங்கீகரிப்பது தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்த நீதிமன்றம் அதை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் 3ம் பாலினத்தவர், ஓரினச் சேர்க்கையாளர்களை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்தும், அவர்களை துன்புறுத்த கூடாது எனவும் காவல் நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாகவும், இது குறித்து காவலர்களுக்கு காவலர் பயிற்சி மையம் மூலமாக பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

3ம் பாலினத்தவர் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவளிக்கும் தொண்டு நிறுவனங்களைளையும் காவல் துறையினர் துன்புறுத்துவதாக நீதிமன்றம் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து, 3ம் பாலினத்தவர் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவளிக்கும் தொண்டு நிறுவனங்களை துன்புறுத்தக் கூடாது என காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களை காவல்துறையினர் துன்புறுத்தினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் நடத்தை விதிகளில், புதிய விதியை கொண்டுவர வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

மேலும், ஒடுக்கப்பட்டோர் நலனுக்கு பல சீர்திருத்தங்களை செய்து வரக்கூடிய மாநில அரசு ஒரு முன்னுதாரணமாக இருந்து, மூன்றாம் பாலினத்தவர் மற்றும் ஓரின சேர்க்கையாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் முன்னேற சாதகமான சூழ்நிலையை உருவாக்கி கொடுக்க நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் ஊடகத்தினர் விழிப்புடன் இருப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்து, இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ஓரினச் சேர்க்கையாளர்களை யாராவது துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை பாயும் – ஹைகோர்ட் எச்சரிக்கை! | Tamilnadu Samugam