கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் - பய பக்தியுடன் கடவுளை வணங்கி விபூதி பூசி சயான் ரகசிய வாக்குமூலம்
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை வழக்கு சம்பந்தமாக நடைபெற்ற மறு விசாரணையில் சயான், தனபால் இருவரிடமும் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் 60 பக்க அறிக்கையை காவல்துறை தயார் செய்துள்ளது.
இந்த அறிக்கை இன்று உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. கொடநாடு வழக்கு விசாரணையில், சில முக்கிய பிரபலங்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியான சயானிடம் பெற்ற ரகசிய வாக்குமூலம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரகசிய வாக்குமூலத்தில் அவர் என்ன கூறியுள்ளார் என்பது குறித்தும், கொடநாடு வழக்கில் மர்மங்கள் விலகுமா? என்பது குறித்தும் பரபரப்பு எழுந்திருக்கும் நிலையில் இன்றைய விசாரணைக்கு நீதிமன்ற வளாகத்திற்குள் வந்தார் சயான். நீதிமன்ற வளாகத்தில் இருந்த ஆலயத்தில் பயபக்தியுடன் வணங்கி விட்டு, விபூதியை எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டு, பின்னர் அவர் நீதிமன்றத்திற்குள் சென்றார்.
இது தொடர்பான மறு விசாரணையில் எத்தனை பேருக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது என்றும், யாரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது என்பது குறித்த தகவல்களை கோத்தகிரி போலீசார் இன்றைய விசாரணையில் தெரிவிக்க உள்ளனர். சயான் அளித்த ரகசிய வாக்கு மூலத்தினால் மீண்டும் கவனம் பெற்றிருக்கிறது கொடநாடு கொலை கொள்ளை வழக்கு. கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதியன்று கொடநாடு எஸ்டேட் காவலாளியை கொலை செய்து கொள்ளை சம்பவம் நடந்தேறி உள்ளது. இது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் கேரளாவைச் சயான் இருவருக்கும் தொடர்பு இருப்பதாக போலீஸ் தெரிவித்திருந்தது.
இந்த வழக்கில் தொடர்புடைய கனகராஜ், சயான் இருவரும் அடுத்தடுத்து விபத்தில் சிக்கினார்கள். வழக்கில் தேடப்பட்டு வந்த கனகராஜ் சேலத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது . கேரள மாநிலம் பாலக்காட்டில் மனைவி, மகளுடன் காரில் சென்று கொண்டிருந்த சயான் சாலை விபத்தில் சிக்கினார். பின்னால் துரத்திக் கொண்டு வந்த காரிடமிருந்து தப்பிப்பதற்காக தான் காரை வேகமாக ஓட்டிய போது அந்த விபத்து நடந்ததாக அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த விபத்தில் சயான் படுகாயங்களுடன் உயிர் தப்பி விட்டாலும், அவரது மனைவியும், மகளும் பரிதாபமாக உயிரிழந்தார்கள். கொடநாடு கொள்ளைச் சம்பவம் நடந்த 3 மாதங்களுக்குப் பின்னர் கொடநாடு எஸ்டேட்டில் கணினி பிரிவில் பணிபுரிந்து வந்த இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இப்படி கொடநாடு சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தது கொடநாடு வழக்கில் பெரிய அளவில் கவனம் பெற்றது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் அனுமதி கோரியது காவல்துறை. நீதிமன்றத்தின் அனுமதி கிடைத்த பிறகு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அவர்களிடமிருந்து மீண்டும் விசாரணை நடத்தியது கோத்தகிரி காவல்துறை. விசாரணையின்போது வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயான் போலீசாரிடம் ரகசிய வாக்குமூலம் கொடுத்தார்.
அவர் அளித்த ரகசிய வாக்குமூலம் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அந்த வாக்குமூலத்தில் என்ன தெரிவித்திருக்கிறார் புதிய குற்றவாளிகளாக யாரை அடையாளம் காட்டியிருக்கிறார் என்ற பரபரப்பு தற்போது எழுந்துள்ளது. ரகசிய வாக்குமூலம் அளித்திருப்பதால் சயான் உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறப்படுகிறது. விபத்தில் மனைவி, மகளை இழந்துவிட்டதால் நடந்த உண்மைகளை எல்லாம் சொல்வேன் என்று சயான் கூறியுள்ளார்.
இந்நிலையில், அவர் தன் உயிருக்கு பயந்ததாக தெரியவில்லை. மனைவி, மகளை இழந்த தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கடவுளை வணங்கி விபூதி பூசிக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.