செல்போனில் சீரியல் பார்த்தபடி அலட்சியமாக பைக் ஓட்டிய இளைஞர் - அதிரடியாக பிடித்து அபராதம் விதித்த போலீசார்!

tamilnadu-samugam
By Nandhini Jul 31, 2021 07:52 AM GMT
Report

கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் நேற்று முன்தினம் இரவு இளைஞர் ஒருவர் செல்போனில் சீரியல் பார்த்துபடி பைக்கில் வேகமாக பயணம் செய்தார். அவருக்கு பின்னால் வந்த வாகன ஓட்டி ஒருவர் இதனை செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

இந்த வீடியோ காட்சி சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவியது. பலர் இவரின் செயலுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து கமெண்ட் செய்தனர்.

வீடியோவில் பதிவாகி இருந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து, கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதில் வாகனத்தை ஓட்டிச்சென்ற நபர் கோவை ரத்தினபுரியை சேர்ந்த முத்துசாமி (35) என்பது தெரியவந்தது. முத்துச்சாமியை பிடித்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், இருசக்கர வாகனத்தில் ஹெட்லைட் மீது தனியாக செல்போன் ஸ்டாண்ட் அமைத்து, அதில் செல்போன் வைத்து சீரியல், சினிமா உள்ளிட்டவற்றை பார்த்தபடி வாகனம் ஓட்டுவதை வாடிக்கையாக கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து, போலீசார் முத்துசாமி மீது வாகனத்தை ஓட்டிக்கொண்டு செல்போன் பேசுதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், அவருக்கு ரூ.1,200 அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

இதுபோன்ற செயல்களில் யார் ஈடுபட்டாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

செல்போனில் சீரியல் பார்த்தபடி அலட்சியமாக பைக் ஓட்டிய இளைஞர் - அதிரடியாக பிடித்து அபராதம் விதித்த போலீசார்! | Tamilnadu Samugam