‘அம்மன்’ கண் திறந்ததாக அலை, அலையாக திரண்ட மக்கள்கூட்டம் - அம்மனுடன் செல்ஃபி எடுத்த பக்தர்கள்!
கரூர் அருகே உள்ள வாங்கப்பாளையம் பகுதியில் ‘எல்லை வாங்கலம்மன்’ திருக்கோயில் உள்ளது. இந்த கோவில் சுமார் 60 ஆண்டுகள் பழமையானது. இந்த கோவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே வணங்கி வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக அந்த கோவிலில் பலரும் சாமி தரிசனம் செய்து வந்தனர்.
ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையான நேற்று கோவில் பரம்பரை பூசாரியான சரவணனின் மகன் சக்திவேல், அம்மனுக்கு அபிஷேகம் செய்து தீபாரதனை காட்டினார்.
பின்பு, தான் வைத்திருந்த செல்போனில் அம்மனை போட்டோ எடுத்தார். அந்த போட்டோவை பார்த்த போது அம்மனின் கண்ணில் திருநீர் பூத்திருந்தது போல் இருந்தது. இதனை அருகில் உள்ள கோவிலிலிருந்த தன் தந்தையிடம் கொண்டு போய் காட்டி மகிழ்ந்துள்ளார்.
சாமி கண் திறந்து விட்டது என்ற இந்த தகவல் அப்பகுதியில் தீயாய் பரவியது. இதனையடுத்து, கூட்டம், கூட்டமாக அப்பகுதி மக்கள் கோவிலுக்கு வந்து அதிசயமாக பார்த்து விட்டுச் செல்கின்றனர்.
மேலும், தாங்கள் வைத்திருக்கும் செல்போன் மூலம் அம்மனை போட்டோ எடுத்துக் கொண்டு திரும்பிச் செல்கின்றனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், பொதுமக்கள் கலைந்து செல்ல மறுத்து அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். அப்போது அங்கு வந்த பூசாரி சரவணன் அம்மனின் கண்ணில் இருந்த திருநீரை துடைத்து விட்டுச் சென்றார்.
