தன் காலை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த 7 வயது சிறுவன் : மருத்துவமனையில் அலறிய நோயாளிகள்!
காஞ்சிபுரம், ஏகனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமு. இவரது மகன் தர்ஷித் (7). சிறுவன் தர்ஷித் கடந்த 16ம் தேதி தனது பாட்டி வீட்டிற்கு சென்றான். அப்போது, வயலில் தர்ஷித் விளையாடிக்கொண்டிருந்தான்.
அப்போது, அவன் காலில் ஏதோ ஒன்று கடித்தது. அதை உணர்ந்த தர்ஷித் என்னவென்று கீழே பார்த்தான். அவன் கால் அருகில் கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு நின்றுக்கொண்டிருந்தது. உடனே அந்த பாம்பை லாவகமாக பிடித்தான் தர்ஷித். உடனே, அந்த பாம்பை கையில் எடுத்துக்கொண்டு, பெற்றோரிடம் ஓடினான்.
கையில் பாம்புடன் வந்த மகனை பார்த்து பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே, சிறுவனை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.
கையில் பாம்புடன் வந்த சிறுவனைப் பார்த்து மருத்துவமனையில் இருந்த பிற நோயாளிகளும், மக்களும் அலறினர். உடனே மருத்துவர்கள் சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சையை அளித்தனர்.
சிறுவனுக்கு பாம்பு கடித்த பிறகு ஏற்படும் எந்த மாற்றமும் அவன் உடலில் தெரியவில்லை என உறுதியான பின்னர், அவனை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
மறுநாள், சிறுவனின் கால் வீக்கமடைந்தது. உடல் நலம் மோசமடைய தொடங்கியது. இதனால் மீண்டும் மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான்.அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிறுவனை குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் குழு தர்ஷித்துக்கு சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து ஒரு வார காலம் கொடிய பாம்பு விஷம் முறிக்கும் சிகிச்சைக்கு பிறகு, தற்போது சிறுவன் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளான்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், சிறுவனிடம் நாங்கள், தம்பி.. ஏன் பாம்பை கையில் கொண்டு வந்தாய் என்று கேட்டோம். அதற்கு அச்சிறுவன், நான் பாம்பை கையில் கொண்டு வந்தால் தானே, என்னை எது கடித்தது என்று உங்களுக்கு தெரியும் என்று அவன் சொன்ன எங்களுக்கு மிகவும் வியப்பாக இருந்தது என்றனர்.