12ம் வகுப்பு மாணவர்கள் துணைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
மதிப்பெண் குறைவாக இருப்பதாக நினைக்கும் மாணவர்களுக்கும், 12ம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசு தேர்வு இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -
கொரோனா தமிழகத்தில் பரவி வந்ததால் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.
மாணவர்களின் 10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மதிப்பெண் கணக்கிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அதனையடுத்து, கடந்த 19ஆம் தேதி மதிப்பெண் பட்டியலை வெளியிடப்பட்டது.
மாணவர்கள் நேற்று தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து கொண்டார்கள். மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதும் மாணவர்கள் மறுதேர்வு எழுத விண்ணப்பிக்க அதற்கான தேதி நேற்று வெளியிடப்பட்டது.
12 வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 19ம் தேதி வரை தேர்வு நடைபெறும். தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இன்று முதல் 27ம் தேதி வரை தேர்வுத் துறை உதவி இயக்குனரகங்கள் வாயிலாக விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்றும், ஏற்கனவே விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டாம் என்றும் அறிவித்துள்ளது.
தனித்தேர்வர்களுடன் சேர்த்து மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கும் தேர்வு நடத்தப்படவுள்ள நிலையில் இன்று முதல் மறுதேர்வுக்கான விண்ணப்பங்கள் தொடங்குகின்றன.
ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களே இறுதி மதிப்பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.