வீட்டு முன்பு படமெடுத்து ஆடிய நாகம் - 30 நிமிடம் போராடி குடும்பத்தினரை காப்பாற்றிய செல்லப்பூனை!

tamilnadu-samugam
By Nandhini Jul 22, 2021 05:16 AM GMT
Report

பாம்புகளிடம் சண்டையிட்டு எஜமானர்களை நாய்கள் மட்டுமே அதிகம் காப்பாற்றி இருக்கின்றன. இந்த செயலை பூனைகளும் செய்வதுண்டு. எஜமானர்களுக்கு எந்த பாதிப்பு ஏற்படாத வண்ணம், படமெடுத்து ஆடிய நாகப்பாம்பிடம் சண்டை போட்டு சுமார் 30 நிமிடங்களாக போராடியுள்ளது ஒன்றரை வயது ஆண் பூனை.

ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் பீமதங்கி பகுதியைச் சேர்ந்தவர் சம்பத்குமார் பரிதா. இவர் ஒரு ஆண் பூனையை வளர்த்து வந்தார்.

சம்பவத்தன்று, வீட்டுக்குள் நின்றிருந்த செல்லப்பூனை ‘சினு ’விருட்டென்று வாசலுக்கு ஓடியுள்ளது. இதைப் பார்த்த சம்பத் குமார் பூனை ஏன் இப்படி வேகமாக ஓடுகிறது என்று சந்தேகமடைந்த வெளியே போய் சினுவை பார்த்தார்.

அப்போது வீட்டிற்குள் நுழைய முயற்சித்த 4 அடி நாகப்பாம்பினை பூனை எதிரே நின்று தடுத்துக்கொண்டிருந்தது. பாம்பு படமெடுத்து ஆடவும், எதிரே நின்று சீறியபடியே அதை உள்ளே நுழையவிடாமல் பூனை தடுத்துள்ளது.

இது குறித்து சம்பத்குமார் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். உடனே சம்பவ இடத்திற்கு வனத்துறையிலிருந்து தன்னார்வலர் அருண்குமார் பரால் விரைந்து வந்தார்.

அவர் பாம்பிற்கு முன்னால் நின்று வீட்டிற்குள் நுழைவதை தடுக்க பூனை முயற்சித்து வருவதை கண்டார். முதலில் அந்த சினு பூனையை அந்த இடத்திலிருந்து விலக்கிவிட்டு, பின்னர் நாகப்பாம்பினை லாவகமாக பிடித்தார்.

இது குறித்து அருண்குமார் பரால் கூறுகையில், ‘நாகம்பாம்பிடம் இருந்து அரை மணி நேரமாக போராடியும் பூனைக்கு எந்த காயம் ஏற்படவில்லை. மிக எச்சரிக்கையாக பாம்பிற்கு முன்னால் நின்று சண்டை போட்டுள்ளது’ என்றார்.

பூனையை கொல்லும் திறன் கொண்டது நாகம். அப்படி இருந்தும் நாகப்பாம்பினை எதிர்த்து நின்று தைரியமாக பூனை போராடியுள்ள வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.