‘நீ என்ன கலெக்டரா’ என்று கேட்டவர்கள் மத்தியில் சாதனையாளராக உருவெடுத்த ஆஷா! தூய்மைப்பணியாளர் ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி

tamilnadu-samugam
By Nandhini Jul 20, 2021 09:24 AM GMT
Report

தனது விடாமுயற்சியால், தூய்மைப் பணியாளராக வேலை பார்த்த ஆஷா ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற சம்பவம் தற்போது சமூவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஜோத்பூரைச் சேர்ந்தவர் ஆஷா. இவருக்கு வயது 40. இவர் கணவனால் கைவிடப்பட்ட பெண். இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கணவன் விட்டுச் சென்றதால் இரு குழந்தைகளை கையில் வைத்துக் கொண்டு வறுமையில் தவித்தார் ஆஷா. இதனால், அவர் ஜோத்பூர் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக தனது தாயுடன் வேலை பார்த்து வந்தார்.

சிறுவயதில் பள்ளிக்கூட படிப்பில் ஆஷா சிறந்து விளங்கினார். 40 வயதானாலும் தன் கல்வி கனவை தொடர பெற்றோர் உதவி செய்தனர். இதனால், கல்லூரியில் சேர்ந்து 2018-ல் பட்டமும் பெற்றார் ஆஷா.

அதுமட்டுமில்லாமல், அரசுப் பணி தேர்வுக்காகவும் தயாரானார். மேலும், 2018-ல் அரசுப் பணிக்கான தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெற்ற போது இரண்டிலும் ஆஷா கலந்துக்கொண்டார். அதன்பின் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேர்வின் முடிவுகள் தாமதமாக அறிவிக்கப்பட்டாலும், இதில் நல்ல மதிப்பெண் எடுத்து தற்போது வெற்றி அடைந்துள்ளார்.

கடந்த சில வருடங்களுக்கு முன் தூய்மைப் பணியாளராக இருந்த ஆஷா, தற்போது துணை கலெக்டராக உருவெடுத்திருக்கிறார். இந்த சம்பவம், ஆஷா அவரது குடும்பம் மட்டுமல்லாது அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இது குறித்து ஆஷா பேசியதாவது -

நான் இதற்கு சில இடங்களில் ஏதேனும் கேள்வி கேட்டால் ‘நீ... என்ன கலெக்டரா’ என மக்கள் என்னை கேலி செய்வார்கள். அப்போதெல்லாம் கலெக்டர் என்றால் என்ன என்றுகூட எனக்குத் தெரியாது.

அதன்பின் கலெக்டருக்கான அர்த்தத்தை நான் கண்டறிந்தேன். அப்போதே ஐஏஎஸ் தேர்வில் கலந்துகொள்ள ஆசைப்பட்டேன். எனக்கு சிவில் சர்வீஸ் தேர்வுக்கான வயது வரம்பு முடிந்துவிட்டது என்பதை அறிந்து ராஜஸ்தான் அரசுப் பணி தேர்வாணைய தேர்வுகளில் கலந்துகொள்ள முயன்றேன். தேர்வுக்காக 3 ஆண்டுகளாக கடுமையாக தயாரானேன்.

இடையில் தூய்மைப் பணியாளராகவும் வேலைக்குச் சென்றேன். அந்த வேலையில் எனக்கு ரூ.12,500 சம்பளம் கிடைத்தது. ஒருவர் உங்கள் மீது கற்களை எறிந்தால், அதை சேகரித்து நாம் ஒரு பாலம் கட்ட வேண்டும் என்பது என் எண்ணம்.

இப்போது நான் தேர்ந்தெடுத்துள்ள பணியின் மூலம் என்னைப்போன்றோருக்கு பல உதவிகளை செய்ய விரும்புகிறேன்’.

இவ்வாறு அவர் மகிழ்ச்சி பொங்க கூறினார். 

‘நீ என்ன கலெக்டரா’ என்று கேட்டவர்கள் மத்தியில் சாதனையாளராக உருவெடுத்த ஆஷா! தூய்மைப்பணியாளர் ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி | Tamilnadu Samugam

‘நீ என்ன கலெக்டரா’ என்று கேட்டவர்கள் மத்தியில் சாதனையாளராக உருவெடுத்த ஆஷா! தூய்மைப்பணியாளர் ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி | Tamilnadu Samugam